தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 நவம்பர், 2012

பிள்ளையார் பெருங்கதை - விரதம் - பிள்ளையார் பெருங்கதை தோத்திரம், விநாயகர் அகவல் இணைப்பு!!


பிள்ளையார் பெருங்கதை - விரதம் - பிள்ளையார் பெருங்கதை தோத்திரம், விநாயகர் அகவல் இணைப்பு

ஓம்
கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமா ஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேச்வர பாத பங்கஜம் 

சாரம்:
யானையினுடய முகம் படைத்தவரும், பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும், பழுத்த ஜம்பூ பழத்தின் ரசத்தை சாப்பிடுபவரும், உமாவின் (பார்வதீ தேவியின்) குமாரரும், நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக் காரணபூதராக விளங்குபவரும், விக்னங்களுக்கே (தடங்கல்களுக்கு) ஈஸ்வரரும் (அதிபதி) ஆகிய கணபதி பகவானின் பாதகமலங்களில் தண்டனிடுகிறேன்.


விநாயகர் விரதம்
விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது. இவ்விரதம் இவ்வருடம் 28.11.2012 புதன் கிழமை வட-அமெரிக்காவிலும், 29.11.2012 வியாழக்கிழமை இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலும் ஆரம்பமாவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் இருபத்தொரு நாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர்கள் பலர் இன்றுமுளர். சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திலும், பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திலும் இவ்விழா வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பெறுகின்றது.

ஆடவர் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் இருபத்தொரு இழையாலாகிய நூல் காப்பு அணிந்து விரதமிருத்தல் வேண்டும். இப்படிச் செய்ய இயலாதோர் மார்கழி மாத விநாயகர் சஷ்டியினன்று விரத சீலராக இருப்பது இன்பமூலமாகும். தன வைசியர்கள், மரகத விநாயகரைச் சஷ்டியினன்று மிகவும் வழிபாடு செய்து வருகின்றனர். "சாந்த" வழிபாடுகள் செய்யும் மக்கள் விரதங்களை அனுஷ்டிக்கின்றனர். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க உடைமையால் ஆன்ம உய்தி பெறலாம்.

விநாயகரை வணங்குவது எப்படி?
இருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றியிலும், இடது கையால் இடது நெற்றியிலும் (இரு கைகளாலும் ஒரே தடவையாக) 3 முறை குட்டி; அதன் பின் இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து மூன்று முறை தோப்பிக் கரணம் செய்தல் வேண்டும். குறுக்காக கைகள் வைத்து காதுகளைப் பிடிக்கும் போது வலது-கை வெளிப்பக்கமாக அமைதல் வேண்டும். இடது கை நெஞ்சோடு இருத்தல் வேண்டும். கைகளால் நெற்றியில் குட்டும் போதும் தோப்பிகரணம் செய்யும் போதும் "ஒம் கணேசாய நம" என்ற மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும்.

தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?
அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.

கஜமுகாசுரன் என்ற அசுரன் மகாதர் என்ற முனிவருக்கும் விபுதை என்ற அசுரப் பெண்ணக்கும் மகனாக பிறந்து மாதங்கபுரத்தை ஆட்சி புரிந்து வந்தான். இவன் சிவபிரானை நோக்கிப் பெருந்தவம் புரிந்து யாதோர் ஆயுதத்தினாலும் அழியாவரமும் பெற்றான். தான் பெற்றவரத்தினால் செருக்கடைந்து இந்திராதி தேவர்களைத் துன்புறுத்தினான். இவனுடைய கட்டளையை ஏற்றுச் செய்வதில் சலிப்படைந்த தேவர்கள் சிவபிரானிடம் முறையிட்டனர்.

சிவபிரான் ஆணைப்படி விநாயகப்பெருமான் கஜமுகனுடன் பெரும் போர் புரிந்தார். விண்ணும் மண்ணும் அதிர்ந்தன. இறுதியில் விநாயகர் தமது வலக்கொம்பை முறித்து சிவமந்திரத்தை கூறி ஏவினார். அந்த ஞானமேயாய தந்தம் கஜமுகாசுரனைப் பிளந்தது. மாயா வரம் பெற்ற அவன் மீது கருணை மழை பொழிந்தார் அவனுடைய அறியாமை அகன்றது மெய்யுணர்வு பெற்றான் விநாயகரைப் பணிந்து வணங்கினான். வந்த மூஷிகத்தை வாகனமாக்கிக் கொண்டார்.

விநாயகர் வானவர்கள் மலர் மழை பொழிந்தார்கள். ஆனை முகத்தண்ணலே ! நாங்கள் இத்தனை காலமும் கஜமுகாசுரனுக்கு காலை நண்பகல் மாலை நேரங்களில் ஆயிரத்தெட்டு தோப்புக்கரணம் போட்டோம். இனி தேவர் மீது அதனைச் செய்ய அருள் புரிக என்று வேண்டிக் கொண்டானர் விநாயகர் புன்முறுவல் பூர்த்து மூன்று முறை தோப்புக்கரணம் போட்டால் போதும் என்று கூறி அருள் புரிந்தருளினார்.

அன்று முதல் இன்றுவரை தேவர்களும் அடியவர்களும் மூன்றுமுறை அப்பொருமான் முன் தோப்புக்கரணம் இடுவதனால் அறிவு வளர்ச்சியும் உடல் நலனும் உண்டாகும் விநாயகரின் பெருங்கருணைக்கும் உரியவராகின்றார். கஜமுகாசுரனை விநாயகர் வெற்றி பெற்றதினால் மனமகிழ்ந்த சிவபெருமான் கணங்களுக்கெல்லாம் தலைவராக்கி கணபதி கணேசர் கணாதிபன் கணநாதன் என வாழ்த்தி வரமும் கொடுத்தார்.

தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்?
மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.

விரதத்தின் போதும், கிரியைகள் செய்யும் போதும் தர்ப்பை அணிவது ஏன்?
தர்ப்பைப் புல்லுக்கு மற்றைய புற்களைப் போலல்லாது விஷேச குணம் ஒன்றுள்ளது. அதாவது மின்சாரத்தை எல்லா உலோகங்களும் கடத்தக் கூடியவை. ஆனால் அவற்றுள் செப்பு-உலோகம் அதனை வெகு சுலபமாக கடத்தும் வல்லமை கொண்டுள்ளது. அதனால்தான் அதனை மின் பாவனையின் போது அதிகமாக பயன் படுத்துகின்றார்கள்.

அது போலவே தர்ப்பைப் புல்லுக்கும் கிரியைகளின் போது சொல்லப் பெறும் மந்திரங்கள் கிரகிக்கும் தன்மையும், அதனை அணிந்திருப்பவருக்கு போசிக்கும் திறனும் கொண்டுள்ளது. அதனால் கிரியைகளின் போது சொல்லப் பெற்ற மந்திரங்களின் முழுச் சக்தியும் அதனை அணிந்திருப்பவருக்கு கிடைக்கின்றது.

அருகம்புல் மாலை ஏன்?
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.

வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.

பெருச்சாளி எப்படி விநாயகரின் வாகனமானது?:
மாகத முனிவருக்கும் வீபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதங்களாலும் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் இந்திடன் முதலான தேவர்களுக்கு இடர் விளைவிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவ-சக்தியின் வேண்டுதலினால் விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அவன் விட்ட பாணங்களை எல்லாம் விநாயகர் தன் கையில் உள்ள உலக்கையினால் தடுத்து, அதனைக்கொண்டே அவனை அடித்தார். கஜமுகன் மயங்கி விழுந்தான். ஆனால் இறக்கவில்லை. அவன் பெற்றவரம் நினைவுக்கு வரவே, விநாயகர் தன் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். அவன் பெருச்சாளியாக (மூஷிஹம்) உருமாறி விநாயகரைத் தாக்க வந்தான். விநாயகர் அதனை அடக்கி தன் வாகனமாக்கிக் கொண்டார்.

ஒரு முறை சிவபெருமானும் உமாதேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த போது மகாவிஷ்ணு பொய்ச்சாட்சி சொல்லும்படி ஆகிவிட்டது (அவ்விளையாட்டில் சிவபெருமான் தோற்றுப் போகவே சிவபெருமான் சாட்சியாக நின்ற மகாவிஷ்ணுவை பார்த்து கண்ணால் ஜாடை காட்டி யார் வென்றது எனக் கேட்ட்க விஷ்ணுவும் செய்வதறியாது தோற்றவராகிய சிவபெருமானே வென்றதாகவும்,வென்ற உமாதேவியார் தோற்று விட்டதாகவும் பொய்ச்சாட்சி கூறிவிட்டார். அதனால் கோபமுற்ற உமாதேவி மகாவிஷ்ணுவைக் குருட்டு மலைப் பாம்பாகப் போகுமாறு சபித்துவிட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான் கயமுகாசுரவதம் நடைபெறும் வரைகாத்திருக்குமாறு சென்னார்.

விநாயகர் கயமுகாசுரனுக்கு முத்தி கொடுத்த பின்னர் கணபதீச் சரத்தில் இருந்து மூஷிஹ வாகனத்தில் திரும்பும் வழியில் ஆலங்காட்டில் மலைப் பாம்பாக மாறி இருந்த மகாவிஷ்ணுவைக் கண்ணுற்றார். அவர் பார்வை பட்ட மாத்திரத்தில் மகாவிஷ்ணு தம் சுய உருவைப் பெற்றார். மகிழ்ச்சி அடைந்தார்

விநாயகரே! எனக்குக் காட்சியளித்து நன்மை புரிந்த இந்த மார்கழித் திங்கள் சஷ்டி நாளில் உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் சகல துயரங்களில் இருந்தும் விடுபட்டுச் சகல விருப்பங்களையும் அடையும் படி அருள்புரியவேண்டும் என்று கோரினார். அதற்கு விநாயகரும் மகிழ்ச்சியோடு இசைந்தார்.

இது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, பெருங்கதை விதரம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பெறுகிறது. சைவர்களுக்கு இக்காலம் மிகவும் புனிதமான காலமாகும்.

21 நாட்களும் ஒரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர் கரும்பு மோதகம் அவல் எள்ளுண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க வேண்டும் கேட்க வேண்டும் ( இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்).அடுத்த சஷநாள் ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விதரத்தை நிறைவேற்ற வேண்டும்.

பிள்ளையாரின் திருமணம்:
பிரம்மதேவனுக்கு புத்தி, சித்தி என்ற இரண்டு புத்திரிகள் இருந்தனர். பிரம்மதேவர் அவர்களை விநாயகருக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். அதனால் அவர் நாரதரைஅழைத்து தன் விருப்பத்தை கூறி, விநாயகரிடம் தூது அனுப்பினார்.

நாரதரும் விநாயகரிடம் சென்று தன் இயல்பான கலகமூட்டும் வேலையைச் செய்யாமல் ஒழுங்காக வந்த விஷயத்தைக் கூறினார். புத்தியையும், சித்தியையும் அங்கம் அங்கமாக வர்ணித்து இப்படிப்பட்டவர்களை மணக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி விநாயகரின் மனத்தில் ஆசையை ஏற்படுத்தினார். பிள்ளையாரும் சம்மதித்தார். நாரதர் நேராகச் சென்று விஷயத்தை பிரம்மனிடம் கூறி விட்டார். பிரமனும் முறைப்படி சிவபெருமானையும் பார்வதியையும் பார்த்து விஷயத்தைக் கூறவே சிவபெருமானும் பார்வதியும் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்து விட்டனர்.

திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. விஸ்வகர்மா (தேவதச்சன்) திருமணத்துக்கு என்று சொர்க்கலோகத்தை விட சிறப்பான ஒரு நகரத்தை நிர்மாணித்தான். திருமணத்தைக் காண அனைத்து லோகங்களிலிருந்தும் கூட்டம் கூடிவிட்டது. அவர்களின் பசியைத் தணிக்க காமதேனு அவர்களுக்கு உணவு அளித்துக் கொண்டே இருந்தது. திருமண நாளும் வந்தது.

சித்தியை லட்சுமி தேவியும், புத்தியை இந்திராணியும் அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். நூறாயிரம் கோடி தேவர்கள் மந்திரம் முழங்க, சித்தி, புத்தி இருவரின் கழுத்திலும் விநாயகர் மங்கள நாண் பூட்டினார். பிறகு திருக்கயிலாயம் சென்று பெற்றோரிடம் ஆசி வாங்கி அமைதியாக இல்லறம் நடத்தலானார்.

அது எப்படியோ அண்ணனாகிய பிள்ளையாருக்கும், தம்பியாகிய முருகனுக்கும் இருதுணைவிகள் அமைந்துவிட்டனர். முருகனுக்கு வள்ளியும், தெய்வானையும் இரு மனைவியர் என்பது எப்படி இச்சா சக்தி, கிரியா சக்தியாகிய தத்துவம் என்று கூறப்படுகிறதோ, அதைப் போல விநாயகப் பெருமானின் சித்தி, புத்தி என்பதும் அவரது சக்திகளே என்றும் கூறப்படுவதுண்டு.

விநாயகர் மகிமை

பிரணவ வடிவமே விநாயகர், தமக்கு மேலான நாயகர் இல்லாத பெருமான் என்பதே சொற்பொருள். தேவர், மனிதர் முதலிய, யாவராலும் முதலில் வழிபடப்படுபவர் மூத்த பிள்ளையாரே. “விக்கின விநாயக பாத நமஸ்தே” என்பர் வட நூலார். தம்மை நினைவாரது இடையூறுகளைப் போக்கியும், நினையாதார்பால் துன்பங்களை உளவாக் கியும் விளங்குதலால் விநாயகருக்கு விக்கினேசுவரர் என்ற திருநாமமுளதாயிற்று.

சிவபிரான், திரிபுர தகனஞ் செய்யச் செல்லுங்கால் நினையாமையால் அவர் சென்ற தேரின் "அச்சது பொடி" செய்தார் என்பர்.

திருபாற்கடல் கடையும்போது திருமால் முதலினோர் விநாயரை வணங்காமையால், கணேசமூர்த்தி மந்தர மலையைச் சாய்த்தனர் என்றும் கூறுவர்.

ஒளவையார் பூசையை ஏற்று அவரை கயிலையில் சேர்த்த அனுக்கிரக மூர்த்தி விநாயகரே! சேரமான் குதிரை கயிலை சேரமுன் ஒளவையாரை விநாயகப் பெருமான் துதிக் கையாலெடுத்துக் கயிலையில் இட்டனர். இதனால், கிழவியுங் காதம், குதிரையுங் காதம்” என்றனர் முன்னோர்.

நன்மை நாடொறும் நம்மை நணுக விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோமாக.

விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள்
ஒம் என்ற சிறப்பான பிரணவத்திற்கு கணபதியே தலைவர். விநாயகரை குறிப்பாக பதினாறு மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல் சிறப்பு. அவை:
ஒம் சுமுகாய நம:
ஒம் ஏக தந்தாய நம:
ஒம் கபிலாய நம:
ஒம் கஜகர்ணிகாய நம:
ஒம் விகடாய நம:
ஒம் விக்னராஜாய நம:
ஒம் கணாதிபாய நம:
ஒம் தூமகேதுவே நம:
ஒம் கணாத்யக்ஷ£ய நம:
ஒம் பாலசந்த்ராய நம:
ஒம் கஜாநநாய நம:
ஒம் வக்ரதுண்டாய நம:
ஒம் சூர்ப்பகர்ணாய நம:
ஒம் ஹேரம்பாய நம:
ஒம் ஸ்கந்த பூர்வஜாய நம:
விநாயகப் பெருமானை இந்தப் பதினாறு மந்திரங்களால் வழிபட்டால் பெருமானது அருள் பூர்ணமாகக் கிடைக்கும்.


பெருமை வாய்ந்த பிள்ளையார்
மிதிலையை ஆண்டு வந்த ஜனகராஜாவின் அரண்மனை தர்பார். அனைத்து மந்திரி பிரதானிகள் புடைசூழ மன்னன் கொலுவீற்றிருந்தான். அப்போது அந்த அவைக்குள்ளே நாரதர் நுழைந்தார். எந்த இடத்துக்கும், எந்த நேரத்திலும் பிரவேசிக்கக் கூடிய உரிமையைப் பெற்ற அவர் காரணம் ஏதும் இல்லாமலா வந்திருப்பார்? இல்லை, காரணம் இருந்தது. ஆனாலும் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. உள்ளே நுழைந்த நாரதரை அனைவரும் வணங்க, மன்னன் தன் சிம்மாசனத்தை விட்டு எழுந்து நாரதரை வரவேற்கவில்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே அவரை வரவேற்றான்.

எனினும் மன்னனை மனமார ஆசீர்வதித்தார் நாரதர். “மன்னா, நீ விரும்பிய அனைத்துச் செல்வங்களும், மற்ற வளங்களும் உனக்குக் கிடைக்க இறைவன் அருள் புரிவான்.” என்றார். ஜனகருக்குக் கொஞ்சம் அலக்ஷியம். ஏளனமாய்ச் சிரித்தார். “நாரதரே, இதை வேறே யாரானும் சொல்லி இருந்தால் இன்னும் சிரித்திருப்பேன். அனைத்தும் அறிந்த நீர் சொல்லலாமா? நான் என்ன கல்லாதவனா? அனைத்தும் அறியாதவனா? கொடுப்பவன் யார்? எடுப்பவன் யார்? கொடுப்பவனும் நானே! எடுப்பவனும் நானே! எல்லாம் வல்லவ அந்த இறைவனும் நானே! ஜனகன் என்ற மன்னனும் நானே! அவற்றை வேண்டாமெனில் நானே வெறுத்து ஒதுக்கவும் செய்வேன்! அனைத்தும் நான்! நானே பிரம்மம்! பிரம்மமே நான்!” என்றான் மன்னன்.

நாரதருக்கு தீர்க்கதரிசனம் தெரியும் என்றாலும் மன்னனின் இந்த அகம்பாவமான பேச்சு மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. வாய் திறவாமல் வெளியே வந்தார். நேரே கெளண்டிய ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றார். கெளண்டின்ய ரிஷி தான் அருகம்புல்லின் மகிமையை உலகுக்குத் தன் மனைவி மூலம் காட்டியவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் ஆசிரமத்தில் இருந்த விநாயகர் கோயிலில், ரிஷி வழிபட்ட விநாயகர் முன்னே நின்று, “விநாயகா, இது என்ன? ஜனகனுக்கு புத்தி பேதலித்துவிட்டதா? உண்மையான பிரம்மம் என்னும் தத்துவம் அறியாமல் பேசுகின்றானே! கர்வம் வந்துவிட்டதே! நாடாளும் மன்னனுக்கு இறை உணர்வில் இத்தனை கர்வம் வந்தால் குடி மக்கள் எப்படி நல்வாழ்வு வாழமுடியும்? மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் அன்றோ? இந்த ஜனகனுக்கு நல்லறிவு புகட்ட வேண்டிய காலமும் வந்துவிட்டது. நீயே அருள் புரிவாய், வேழமுகத்தோனே!” என்று வேண்டிக் கொண்டார்.

ஜனகரின் அரண்மனை வாயில். அந்தணர் ஒருவர், தள்ளாத வயது, உடலெல்லாம் குஷ்ட நோயால் பீடிக்கப் பட்டு, நடக்கக் கூட முடியாத நிலை, அரண்மனை வாயிலில் வந்து நின்றுகொண்டு, “பசி, பசி” என புலம்பிக் கொண்டு இருந்தார். காவலர்கள் செய்வதறியாமல் மன்னனுக்குத் தகவல் தர, மன்னன் அவரைத் தன்னிடம் அழைத்துவரச் செய்தான். அந்தணர் உள்ளே வந்ததும், “என்ன வேண்டும்?” என மன்னன் கேட்க, “பசிக்கு உணவு!” என்றார் அந்தணர். மன்னனுக்கு ஒரு வழியில் நிம்மதி! அப்பாடா, நம்மால் முடிந்ததைக் கேட்டாரே!” பூ, இவ்வளவு தானா? யாரங்கே, இந்த அந்தணனுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போடுங்கள்!”

“உத்தரவு மன்னா!” அந்தணர் சாப்பாட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். உணவும் பரிமாறப் பட்டது. அந்தணரும் இலையில் கை வைத்தாரோ இல்லையோ உணவு மொத்தமும் காணோம், காணவே காணோம்! சுற்றி இருந்தவர்கள் ஏதும் புரியாமல் மீண்டும் பரிமாற, மீண்டும் அந்தணர் கைவைக்க, மீண்டும் அதே கதை! சமைத்த அனைத்து உணவுகளும் வர, மிச்சம், மீதி வைக்காமல் அனைத்தும் பரிமாறப் பட அனைத்தும் இப்படியே காணாமல் போயின. ஆனால் அந்தணரின் பசி மட்டும் தீரவில்லை. பரிமாறியவர்கள் களைத்துச் சோர்ந்து போய், “திரும்பச் சமைத்துத் தான் போடவேண்டும். பொறுங்கள்.” என்று கூற, அந்தணருக்குக் கோபம் தலைக்கு ஏறியது.

“பசி என வந்தவனுக்கு முதலில் பசியைத் தீருங்கள். அப்புறம் சமைக்கலாம்.” என்று சொல்ல, பணியாளர்கள் செய்வது அறியாமல் தானியங்களைப் பச்சையாக அப்படியே எடுத்துக் கொடுக்க அதுவும் போதவில்லை என அந்தணர் சொல்ல, நெற்களஞ்சியம், தானியக் களஞ்சியம், பால், பழங்கள், காய்கறிகள் என அனைத்தும் சேமிப்பில் இருந்தவை எல்லாம் கொடுத்தும் அந்தணருக்குப் போதவில்லை.

இனி தானியம் விளைந்து வந்து சேமித்தால்தான் அரண்மனைக் களஞ்சியத்தில் தானியம். அரசனுக்குத் தகவல் போனது. தலைநகரில் இருந்த குடிமக்கள் அனைவரிடம் இருந்தும், உணவுப் பொருட்கள், உணவு வகைகள், தானிய வகைகள், பழ வகைகள், காய்கள் வரவழைக்கப் பட்டன. எங்கிருந்து எத்தனை வந்தாலும் அந்தணர் கை வக்கும்போதே மாயமாய் மறைந்து கொண்டிருந்தது. அனனவரும் நடுங்கினார்கள். மன்னனுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டது! யாரிவன்? ஏதோ பூதமாய் இருப்பானோ? பிசாசோ? பிரம்ம ராக்ஷசோ? இவனை எப்படியாவது நல்ல வார்த்தை சொல்லி வெளியே அனுப்ப வேண்டும் என நினைத்த வண்ணம் அரசன் முதலில் அந்த அந்தணனை நாட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் எனக் கட்டளை இட்டான்.

அந்தணன் அரசனைப் பார்த்து, “பசி என வந்தவனுக்கு உணவு கொடுக்காமல் நாட்டை விட்டுத் துரத்துகின்றாயே? நீ ஒரு பெரிய மஹாராஜா! அதுவும் அன்றொரு நாள் நாரதர் வந்தபோது சபையில், “நானொரு பிரம்மம். என்னால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். கொடுப்பதும், நான், எடுப்பதும் நான்! என்னால் முடியாதது எதுவும் இல்லை.” என்றெல்லாம் பேசினாயே? இந்த ஏழைப் பிராமணனின் பசியைப் போக்க முடியாத நீயும் ஓர் அரசனா?“ என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அரசனுக்குத் தன் தவறு புரிந்தது. தன் அகங்காரத்தை நினைத்து மனம் நொந்தான். தவறை உணர்ந்து அதற்குப் பிராயச் சித்தமும் செய்ய விரும்பினான்.

இதனிடையில் பசி, பசி என்று பறந்த அந்தணர் மிதிலாபுரியை விட்டுத் தள்ளி ஒரு குடிசையில் வசித்து வந்த திரிசிரன் என்பவனின் குடிசை வாயிலுக்கு வந்திருந்தார். திரிசிரனின் மனைவி விரோசனை. இருவரும் விநாயகரின் பக்தர்கள். அன்றைய வழிபாட்டை முடித்துக் கொண்டு அன்றைக்குக் கிடைத்த ஒரே ஒரு அருகம்புல் இட்ட நீரை விநாயகருக்கு நிவேதனம் செய்து, அந்த ஒற்றை அருகம்புல்லைக் கணவனுக்கு உணவாய் அளித்துவிட்டுத் தான் அந்த நீரை அருந்தலாம் என விரோசனை எண்ணி இருந்தாள். அப்போது தான் அந்தணர் அங்கே போய்ச் சேர்ந்தார். சோர்வோடு இருந்த அந்தணரைப் பார்த்த திரிசிரனும், அவன் மனைவியும் அந்தணரை வரவேற்று என்ன வேண்டும் எனக் கேட்டனர்.

அந்தணரும், தனது தாளாத பசியைச் சொல்லி, தான் ஜனகனின் அரண்மனைக்குச் சென்றதாகவும், அங்கே அளித்த உணவு போதவில்லை. ஏதோ போட்டான் அரை மனதாக என்றும் சொன்னார். திடுக்கிட்டனர் திரிசிரனும், விரோசனையும். அத்தனை பெரிய மஹாராஜா உணவளித்தே பசி ஆறாதவர் இங்கே வந்து சாப்பிட்டா பசி ஆறப் போகின்றார்? கவலையுடனே அவரைப் பார்த்து, உள்ள நிலைமையைத் தெளிவாய் எடுத்து உரைத்தார்கள். முதல் நாள் வரையிலும் யாசகம் எடுத்து உணவு உண்டு வந்ததையும், அன்றைக்கு யாசகத்திலும் எதுவும் கிட்டாமல், விநாயகருக்கு வழிபாடு செய்து, அருகை நிவேதனம் செய்து, அதுவும் ஒரே ஒரு அருகம்புல்! அந்த அருகைக் கணவனுக்கு உண்ணக் கொடுத்துவிட்டுத் தான் நீர் அருந்த இருந்ததையும் விரோசனை கண்ணீர் பொங்கக் கவலையுடனே தெரிவித்தாள்.

அந்தணரோ குதித்தார்! “ஆஹா, அருகும், அந்த அருகு இருந்த நீருமா? இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? என்னுடைய குஷ்ட நோய்க்கான மருந்தல்லவோ அருகு? அதைத் தீர்க்க இந்த அருகு ஊறிய நீரைவிடச் சிறந்த மருந்து உண்டோ? மேலும் ஜனகன் உள்ளன்போடு எனக்கு உணவு படைக்கவில்லை. அவனிடம் உள்ள செல்வத்தைக் காட்டவும், அவனுடைய செல்வாக்கைக் காட்டவுமே உணவு படைத்தான். உள்ளன்போடு ஒரு கைப்பிடி உணவு கொடுத்தால் வயிறு மட்டுமல்ல, மனமும் நிறைந்துவிடுமே. அதுவும் தும்பிக்கையானுக்கு நீங்கள் இருவரும் நம்பிக்கையோடு படைத்தது வீண் போகுமா?” அந்தணர் அந்த அருகைக் கிட்டத் தட்டப் பறித்து வாயில் போட்டுக் கொண்டு நீரையும் அருந்தினார்.

என்ன ஆச்சரியம்? அங்கே காட்சி கொடுப்பது யார்? தலை ஆட்டிக் கொண்டு, மத்தள வயிறுடன் உத்தமி புதல்வன் அன்றோ வந்துவிட்டான்? இது என்ன விந்தை? இது மட்டுமா? மேலும், மேலும் விந்தைகள் நடந்தன. திரிசிரனின் மண்குடிசை இருந்த இடத்தில் இப்போது மாளிகை ஒன்று முளைத்தது. களஞ்சியம் நிரம்பி வழிந்தது. தங்கமும், முத்தும், பவளமும், வைரமும் மாளிகையில் காணக் கிடைத்தன. திரிசிரன் தம்பதிகளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பலவாறு விநாயகரைப் போற்றித் துதித்தனர். அத்தோடு நில்லாமல் திரிசிரனுக்கு வந்த பாக்கியம் ஜனகனுக்கும் தெரிய வேண்டாமா?

மிதிலாபுரியே செல்வத்தில் மிதந்தது. அந்தணரால் உண்ணப் பட்ட உணவுப் பொருட்களைப் போல் பல மடங்கு உணவுப் பொருட்கள், மேன்மேலும் செல்வங்கள், நிறைந்தன. திடீரென வந்த செல்வத்தைக் கண்டு திடுக்கிட்ட மன்னன் விவரம் விசாரித்து அறிந்து கொண்டு திரிசிரனைக் காண வந்தான். அங்கே இருந்த விநாயக மூர்த்தியை வணங்கித் தன் மமதையை அடக்கித் தனக்குப் பாடம் புகட்டியதற்கு நன்றி சொன்னான். விநாயகரும் அவன் முன்னால் தோன்றி, அவனுடைய அறியாமை நீக்கி நல்ல குருவை நாடி ஞானத்தைத் தரக் கூடிய அறிவைப் பெற அருள் புரிந்தார். அதன் பின்னரே ஜனகரும் யாக்ஞவல்கிய மஹரிஷியை நாடி உபதேசம் பெற்று ராஜரிஷியாக மாறினார். அருகம்புல் தோல் நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்றது. முக்கியமாய் குஷ்டநோய்க்கு அருகம்புல் மிகச் சிறந்த மருந்து என இன்றைய அறிவியல் கண்டறிந்து கூறியுள்ளதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.


பிள்ளையார் பெருங்கதை தோத்திரம் பிரார்த்தனை செய்ய - இங்கே அழுத்துங்கள்



சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் இப்படியே பல நாடுகளிலும் போற்றி வணங்கப்பட்ட, வணங்கப்பட்டு வருகின்ற விநாயகப் பெருமானை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்த பெருமை இந்து மதத்தையே சாரும். மகிமைபெற்ற எம்பிரானை நாமும் வாழ்த்தி வணங்கி உய்திபெறுவோம். “நற் குஞ்ரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண்.” உமாபதி சிவாச்சாரியாரின் “திருவருட்பயன்” என்ற நூலின் காப்புச் செய்யுள்.

"ஓம் விக்னேஸ்வராய நமஹ"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக