தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, September 14, 2012

தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆபத்து!


தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆபத்து!

இக்கோயிலின் விமானத்தைப் பாருங்கள்... எவ்வளவு கலைவேலைப்பாடுகளுடன் அமைந்த உயர்ந்த கருங்கல் விமானம்..!
ஆகம விதி, சில்ப சாத்திர நுணுக்கங்கள், புராதன கணித முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒவ்வொரு கல்லும் அடித்தளத்திலிருந்து விமானம் உச்சி வரை எடைக்கு எடை, நாற்புறத்திலும் சம அளவிலான பாரம் கொடுக்கப்பட்டு ஒரு பிரமிட்டைப் போல் கட்டி எழுப்பியுள்ளனர் நம் தமிழர்கள். இப்புராதன கட்டுமான
த்தின் நுணுக்கங்களை இன்றளவிலும் பொறியியலாளர்களால் முழுமையாகப் புரிந்துக் கொள்ள இயலவில்லை.
நவீன தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில், அவற்றைப் பயன்படுத்தி இக்கோயிலைக் காலங்காலமாய் நிலைத்து நிற்கச் செய்து, வருங்கால சந்ததியினர் வரலாற்றை நினைத்து பூரித்துவிடும்படி செய்ய வேண்டாமா? முக்கிய விடயங்களை அறிவிக்கும் கல்வெட்டுகளைப் பாதுகாத்து வரலாற்றைக் காக்க வேண்டாமா?

ஆனால் அண்மைய காலமாக இக்கோயிலுக்கு ஏற்பட்ட சோதனை

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை அண்மையில் தஞ்சை பெருவுடையார் கோயிலில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபடுவதாகக் கூறி, கோயிலின் பல பகுதிகளைச் சேதப்படுத்தி, வரலாற்றைச் சிதைத்து உள்ளனர். புனரமைப்பு என்றப் பெயரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருகற்றளியைச் சேதப்படுத்தப்படும் வேளையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்
தஞ்சை இராசராசீச்சுரம் திருக்கற்றளியின் இரண்டாவது கோபுரமான ராசராசன் கோபுரத்துடன் இணைத்து தெற்கு - வடக்காக 125.21 மீ.நீளமும், கிழக்கு மேற்காக 241.51 மீ.நீளத்துக்கு நான்கு புறங்களிலும் திருசுற்று மாளிகை எனப்படும் சுற்று மண்டபத்துடன் கூடிய மதில் சுவர்கள் அமைந்துள்ளன. கோயிலின் வடக்குப்புற திருச்சுற்றின் ஒரு பகுதியில் சுவரின் அடித்தளம் மன்ணில் புதைந்ததுடன், அதனருகே மற்றொரு மேற்கூரையில் விரிசலும் ஏற்பட்டது அண்மையில் கண்டறியப்பட்டது.
இக்கோயிலைப் பராமரித்து வரும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை அதைச் சீரமைக்க முடிவெடுத்து, வடக்கு திருச்சுற்று மாளிகையில் அம்மன் சன்னதிக்கும், சுப்பிரமணியர் சன்னதிக்கும் இடைப்பட்ட பகுதியில் 50 மீட்டர் நீளத்துக்கு சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்க ரூ.59 லட்சத்தை ஒதுக்கி, முதல் தவணையாக ரூ.25 லட்சத்தை அனுமதித்து பணிகள் தொடங்கின.
பழுதடைந்த கற்களுக்கு மாற்றாக புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலையிலிருந்து பெரிய கருங்கல் பாறைகள் கொண்டு வரப்பட்டன. இத்திருச்சுற்று மாளிகையில் 206 லிங்கங்கள் உள்ளன. பணி நடைப்பெறும் பகுதியில் இருந்த 23 லிங்கங்கள் அகற்றப்பட்டு பணிகள் நடைப்பெறுகின்றன.
பாதுகாப்பான வகையில் கல் தூண்களைப் பிரித்தெடுக்கத் தவறியதால் பெரும்பாலான சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய தூண்கள் துண்டு துண்டாக உடைந்து சேதமடைந்துள்ளன. இந்தத் தூண்கள் பழைய நிலையில் மீண்டும் இணைக்க முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளன. பழங்கால கட்டிடங்களைப் பற்றிய தகவல்களும், கட்டிட நுணுக்கங்களும், அதனைப் புனரமைக்கும் வேலைகளில் சற்றும் முன் அனுபவமில்லாதவர்களால் வந்த வினை இது!
இவர்களால் சேதப்படுத்தப்பட்ட தூண்களிலுள்ள கல்வெட்டில் இராசராச சோழனின் வாய்மொழி உத்தரவின் பேரில், சோழநாட்டு அமன்குடியைச் சேர்ந்த சேனாதிபதி மும்முடி சோழ பிரம்மராயன் தலைமையில் இந்தத் திருச்சுற்று மாளிகை கட்டப்பட்டது என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேச் செய்திக் குறிப்பு விமானத்தின் பின்புறமுள்ள கருவூர் சித்தர் சன்னதிக்கு அருகிலுள்ள திருச்சுற்று மாளிகை தூண் உட்பட மூன்று இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உடைக்கப்பட்ட தூண்களில் இராசராச சோழனும் அவரது மகன் இராசேந்திர சோழனும், இக்கோயிலுக்காக அளித்த செப்புத் திருமேனிகள் மற்றும் நகைகள் குறித்து கூறப்பட்டுள்ளன.
பழமையான கட்டிடங்களைப் பிரித்தெடுக்கும் போது முக்கிய ஆவணங்களாகத் திகழும் கல்வெட்டுகளைப் பாதுகாப்பது அவசியம். தூண்களுக்கு அழிவு நேரிட்டதுபோல் இக்கோயிலின் மகா மண்டபத்தின் தென்புற துணை பீடம், அதிட்டானம் ஆகிய பகுதிகளில் திருப்பணி என்ற பெயரால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அதிக எடையுள்ள கற்களைப் பிரித்தெடுக்கும் பணியில் மனித உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதால், தூண்கள் கீழே விழுந்து சேதமடைந்துள்ளன. பல லட்சம் நிதி ஒதுக்கி செலவு செய்யும் தொல்லியல் ஆய்வுத் துறை நவீன இயந்திரங்களைக் கொண்டு பணிகளைச் செய்திருந்தால் இந்த இழப்பை தவிர்த்திருக்கலாம்.

தொல்லியல் ஆய்வுத் துறையால் ஏற்பட்ட இந்தச் சேதம் 'ஒரு தேசிய இழப்பு' என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment