தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, August 25, 2012

பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள்!!




பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள்:

சங்க காலத் தமிழகத்திலும் அதற்குப் பின்னரும் விநோதமான தண்டனைகள் வழக்கத்தில் இருந்தன. அரசன், போரில் வெற்றி பெற்றால் தோல்வியுற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவது, அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பது, தோல்வியடைந்த மன்னரின் திருமுடிகளை அல்லது மகுடங்களை உருக்கிக் காலடியில் பலகையாகப் போடுவது, தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் 
கழுதை பூட்டிய ஏரால் உழுவது, யவனர் போன்ற வெளிநாட்டினர் பிடிபட்டால் அவர்கள் தலையை மொட்டையடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது, பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்று பொய் சொன்னவனை மரத்தில் கட்டிச் சாம்பல் பூசுவது, மாற்று மன்னர்களின் குழந்தைகளை யானையின் காலால் இடறச் செய்து கொல்வது, ஒற்றர்களுக்கு மரண தண்டனை அளிப்பது, கொலைத் தண்டனை கிடைத்தோருக்குச் செம்மாலைகளை அணிவிப்பது - இப்படி எத்தனையோ விசித்திரமான வழக்கங்களைக் காண முடிகிறது.


சிறுமிக்கு மரண தண்டனை:
சங்க இலக்கியத்தில் மிகவும் கொடுமையான செய்தி, ஒரு சிறுமிக்கு மரண தண்டனை கொடுத்ததாகும். நன்னன் என்ற கொடுங்கோலன் ஆட்சியில் இது நடந்தது. இதனால் அவனைக் கண்டித்த பரணர் போன்ற புலவர்கள் அவன் பரம்பரையில் வந்த மன்னர்களைக் கூடப் பாட மறுத்து விட்டனர். பெண் கொலை புரிந்த நன்னன் மரபில் வந்த இளம் விச்சிக்கோ என்ற மன்னனைப் பாட மறுத்து விட்டார் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் (புறம் 151).

நன்னன் என்பவன் பூழி நாட்டையாண்ட (கேரளாவின் ஒரு பகுதி) ஒரு சிற்றரசன். நன்னனது தோட்டத்திலுள்ள மரத்திலிருந்து விழுந்த மாங்காய் ஒரு கால்வாயில் மிதந்து வந்தது. அதனை அங்கு நீராடச் சென்ற ஒரு பெண் எடுத்துத் தின்று விட்டாள். உடனே அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன். இதை எதிர்த்த நல்லோர் அனைவரும் கொதித்து எழுந்தனர். அப்பெண்ணின் நிறைக்கு நிறை (துலாபாரம்) தங்கம் தருவதாகவும், 81 யானைகள் தருவதாகவும் பெண்ணின் தந்தை கெஞ்சிப் பார்த்தார். ஆனால் ஈவு இரக்கமற்ற நன்னன் அப்பெண்ணின் மரண தண்டனையை நிறைவேற்றினான். இதைப் பரணர் குறுந்தொகைப் பாடலில் (292) விரிவாக எடுத்துரைக்கிறார்.

மனு நீதிச் சோழன்:
சோழ மன்னர் பரம்பரையில் தோன்றிய 2 மன்னர்களைத் தமிழ் இலக்கியம் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசுகிறது. ஒருவர் புறாவுக்குத் தன் சதையை வெட்டிக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி. மற்றொருவர் ஒரு பசு மாட்டின் முறையீட்டின் பேரில் மகனையே தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன்.

மனுநீதிச் சோழனின் மகன் ஓட்டிச் சென்ற தேரானது ஒரு கன்றின் மீது ஏறி அதைக் கொன்று விட்டது.கன்றை இழந்த பசு உடனே மன்னனின் கோட்டை வாயிலுக்குச் சென்று அங்கு கட்டி விடப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியினை அடித்தது. பசுவின் துயரத்தை அறிந்த சோழ மன்னன், அமைச்சரை அழைத்து, கன்று இறந்தது போலவே தனது மகனையும் தேர்க்காலில் இட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டான்.

பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்னும் ஹமுராபியின் சட்டமே மனுவின் ஸ்மிருதியிலும் இருந்ததாகத் தமிழர் நம்பி, அந்தச் சோழனுக்கு மனுநீதிச் சோழன் என்று பெயரிட்டனர்.

''அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்'' என்று சிலப்பதிகாரமும் ''மகனை முறை செய்த மன்னவன்'' என்று மணிமேகலையும் மனுநீதிச் சோழனைப் புகழ்ந்து பேசுகின்றன.

இலங்கையின் வரலாற்றை விரிவாகக் கூறும் மகாவம்சம் என்ற நூலும் (21 வது அத்தியாயம்) மனுநீதிச் சோழன் கதையைக் குறிப்பிடுகிறது. ஏலாரா (ஏழாரன்) என்ற சோழ மன்னன் இலங்கையை 44 ஆண்டுகளுக்கு நீதி நெறி தவறாமல் ஆண்டான் என்றும் அப்பொழுது இது நடந்தது என்றும் மகாவம்சம் கூறுகிறது. அவன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்.

ஆராய்ச்சி மணி:
தமிழ் மன்னர்கள் நீதிநெறி தவறாது ஆட்சி புரிந்தனர். ஆயினும் எங்கேனும் நீதி தவறினால் மன்னரைக் காண நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. கோட்டை வாயிலில் தொங்க விடப்பட்டுள்ள ஆராய்ச்சி மணியை எவரும் வந்து அடிக்கலாம். மன்னன் ஓடோடி வந்து நீதி வழங்குவான்.

கணவனை இழந்த கண்ணகி மதுரை நகரைத் தீக்கிரையாக்கிய பின்னரும், ஆத்திரமும் வருத்தமும் தணியாமல் நின்றாள். மதுரையின் காவல் தெய்வமாகிய மதுராபதி அவள் முன் தோன்றிப் பாண்டிய மன்னனின் செங்கோல் ஆட்சியை எடுத்துரைக்கிறாள்:

''மறை நா ஓசை அல்ல தியாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே''
(சிலப்பதிகாரம் கட்டுரைக் காதை)

பாண்டிய மன்னரின் ஆட்சியில் அந்தணர்கள் ஓதும் வேதத்தைத் தான் அவன் காதுகள் கேட்டுப் பழகியிருக்கின்றன. இது வரை அவன் ஆட்சியில் எவரும் ஆராய்ச்சி மணியை அடித்துக் கேட்டதேயில்லை என்று மதுராபதித் தெய்வம் கூறுகிறது.

நீதிநெறி தவறாத ஏலாரா (ஏழாரன்) என்ற சோழ மன்னனின் ஆட்சியைப் புகழும் மகாவம்சமும் இந்த ஆராய்ச்சி மணி பற்றிக் குறிப்பிடுகிறது (21-வது அத்தியாயம்).

No comments:

Post a Comment