தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 17, 2012

சாலுமருத திம்மக்கா!!



சாலுமருத திம்மக்கா!!

சாலுமருத திம்மக்கா என்றால், கர்நாடகாவுக்கே தெரியும் ! 80 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில், சுமார் 4 கிலோ மீட்டர் சாலை நெடுக இருபுறங்களிலும் 284 க்கும் மேற்பட்ட ஆலமரங்களை நட்டவர். இவர் பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில் உள்ள கூதூர் கிராமத்தில் வசிப்பவர்.

முன்பு வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட கூதூர் கிராமம் குளிர்ந்து காணப்படுகிறது என்றால் அதற்கு இவர் நாட்டிய மரங்கள் தான் காரணம். 284 க்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன.

இவர் ஏன் இத்தனை ஆலமரங்களை நட்டார், இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது எதனால் ?

சாதாரண கிராமத்து பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர். சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 101 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.

பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும், உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார். இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.

ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார். வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார்.

மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார். அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார்.

ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க !! கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார்.

இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.

இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து. பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது.

என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.

100 வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன.

இவர் பெற்ற விருதுகளில் சில..,

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஓக்லாண்ட்டில் உள்ள ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்பு, திம்மக்கா சுற்றுச்சூழல் கல்வி வளங்கள் என்று அவரது பெயரால் இப்பொழுது அழைக்கபடுகிறது.
சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.

ஹம்பி பல்கலைக்கழகம் வழங்கிய நடோஜா விருது - 2010.
தேசிய குடியுரிமை விருது - 1995.
இந்திரா பிரியதர்ஷணி வ்ரிக்க்ஷமித்ரா விருது - 1997.
வீரசக்ரா ப்ரஷஸ்தி விருது - 1997.
கர்நாடகம் கல்பவல்லி விருது - 2000.
கோட்ஃப்ரே பில்லிப்ஸ் வீர விருது - 2006.
வாழும் கலையின் விசாலாக்ஷி விருது.
நன்றி: SVS
 — 

No comments:

Post a Comment