தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 பிப்ரவரி, 2012

காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா? !!


காந்தியைப் பற்றி இந்தியர்களிடம் பெரும்பாலும் கீழ்க்கண்ட கருத்துகள் இருக்கும்.
1. காந்தி ஒரு தெய்வம். (புத்தர், இயேசு, காந்தி – என்ற வரிசையில் வைக்கப்படுகிறவர்.)
2. காந்தி ஒரு மகான், மாமனிதர். அவரை மாதிரி ஒரு மனிதர் இனி பிறந்துவருவார் என்பது சந்தேகமே.
3.  காந்தி ஒரு பொய்யன். பொறுக்கி. ஏமாற்றுக்காரன். செக்ஸ் வெறியன், பித்தலாட்டவாதி. மனுவாதி.
இவை எவையுமே என்னைக் கவருவதில்லை. காந்தியை, காந்திஜி என்றோ மகாத்மா காந்தி என்றோ அழைக்க என் மனம் ஒப்புவதில்லை. காந்தி ஒரு சாதாரண மனிதர் என்றே நான் கருதுகிறேன். அதுவே என்னை அவர்மீது ஆர்வம் கொள்ளவைக்கிறது. அவர் அசாதாரணமானவர் என்றால் அதனால் சாதாரண மனிதனான எனக்கு எந்தப் பயனுமில்லை.
நான் இப்போது படித்துக்கொண்டிருக்கும் (இன்னும் முடிக்காத) ஒரு புத்தகம் Great Soul: Mahatma Gandhi and His Struggle With India. எழுதியவர் ஜோசஃப் லெலிவெல்ட். காந்தியை எப்படி அணுகுவது என்பதை இந்தப் புத்தகம் எனக்குக் காட்டுகிறது.
மனிதர்கள் யாருமே புனிதர்களாகப் பிறப்பதில்லை. அவர்களது கருத்துகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஏன் மாறுகின்றன? சூழல் மாறுகிறது. புரிதல் மாறுகிறது. தவறு என நாம் நினைத்தவை தவறல்ல, சரி என நாம் நினைத்தவையும் சரியல்ல என்று தோன்றுகிறது. எனவே கொண்டிருக்கும் கருத்துகளும் மாறுகின்றன.
காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். காந்தி முதலில் தன்னை பிரிட்டிஷ்காரர்களுக்கு இணையாகப் பார்க்கிறார். பிரிட்டன் சென்று வக்கீலுக்குப் படித்த தன்னை வெள்ளையர்கள் மதிக்கவேண்டும் என்று நினைக்கிறார். அதன்பின், தன்னைச் சுற்றியுள்ள படித்த இந்திய வர்க்கத்தவர் நலன்களை முன்வைக்கிறார். பிறகு பணம் படைத்த வர்த்தகர்களின் நலனை முன்வைக்கிறார். அந்தக் கட்டத்தில் இந்தியக் கொத்தடிமைகள் பற்றியோ ஆப்பிரிக்க “காஃபிர்கள்” பற்றியோ அவர் கவலைப்படுவதில்லை. பிறகுதான் இந்தியக் கொத்தடிமைகளை முன்வைத்து ஒரு போராட்டத்தில் இறங்குகிறார். அப்போதும், ஆப்பிரிக்கர்களைத் தம் போராட்டத்தில் இணைத்துக்கொள்வது பற்றி அவர் யோசிப்பதில்லை. சொல்லப்போனால், அப்படிச் செய்வது இந்திய நலனுக்கு எதிரானதாக இருக்கும் என்றே அவர் சொல்கிறார். அதன்பின் அவர் இந்தியா வந்துவிடுகிறார்.
ஓர் உலக மனிதர் (யூனிவர்சல் ஹ்யூமனிஸ்ட்) என்பவர் என்ன செய்திருக்கவேண்டும்? மக்களின் உரிமைக்காகப் போராடவேண்டும் என்றால் காந்தி முதலில் என்ன செய்திருக்கவேண்டும்? தென்னாப்பிரிக்காவில் இருக்கும்போதே அங்குள்ள கருப்பர் நலனுக்காகத்தானே முதலில் போராடியிருக்கவேண்டும்? கருப்பர்கள் தலைவர்களுடன் உடன்பாடுகளைச் செய்துகொண்டிருக்கவேண்டும். கருப்பர்கள், இந்தியக் கொத்தடிமைகள், பிற இந்தியர்கள் என அனைவரையும் சேர்த்து, ஒரு குடையின்கீழ் திரட்டி வெள்ளையர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தில்தானே அவர் இறங்கியிருக்கவேண்டும்?
புத்தர்போன்றோ இயேசுபோன்றோ காந்தி தெய்வமோ அல்லது சக்தி படைத்தவரோ அல்லர் என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு இதைப் பாருங்கள். காந்திக்கு, தான் முன்னெடுக்கும் போராட்டங்கள் எப்படிச் செல்லும் என்பது தெரியாது. போராட்ட முறை தெரியாது. எதிராளி எப்படி நடந்துகொள்வான் என்பது தெரியாது. தன் பின்னால் அனைவரும் திரண்டுவருவார்களா என்பது தெரியாது. எனவே மிகவும் உத்தேசமாகத்தான்  (tentative) போராட்டத்தின் பல்வேறு கட்டங்களில் இறங்குகிறார். அரசியல் பிரக்ஞையற்ற, போராட்ட குணமற்ற ஒரு கூட்டத்தை வழிநடத்திச் செல்லவேண்டும். அதனால்தான் சிறுசிறு இலக்குகளாக வைத்துக்கொண்டு முன்னேறுகிறார். மேலும் அவர் உண்மையிலேயே கருப்பர்களின் நலனை அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. அவரது உடனடி நலன் (immediate concern) என்பது இந்தியர்களுக்குப் பெற்றுத் தரவேண்டிய மிகச் சிறிய சலுகைதான். வேறு எதையும் பெறமுடியும் என்று அவருக்கு அப்போது நம்பிக்கை இருந்திருக்கவில்லை.
காந்தியை புனிதராக, தெய்வமாகப் பார்க்கும்போது நமது எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறாகத்தான் இருக்கும். தெய்வம் என்றால் இரண்டு அஸ்திரங்களை விட்டு ஸ்மட்ஸையும் போத்தாவையும் கொன்று தள்ளியிருக்கலாம். மதம்கொண்ட நலகிரி யானையை புத்தர் அடக்கியதுபோல கைகளை உயரே தூக்கி ஸ்மட்ஸை அடிபணியவைத்து வேண்டியதைப் பெற்றிருக்கலாம். ஆனால் நிதர்சன உலகத்தில் சாதாரண ஒரு மனிதன், தட்டுத் தடுமாறி, இப்படிச் செய்யலாமா, அப்படிச் செய்யலாமா என்று முயன்று பார்ப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நமக்குத் தெளிவு கிடைத்துவிடும்.
அதேபோலத்தான் இந்தியாவிலும். சுதந்தரம் பற்றி அவருக்கென்று சில பிரத்யேகமான கருத்துகள் இருந்தன. சுதந்தரம் என்பதை அவர் தனியாகவே பார்க்கவில்லை. சுயராஜ்யம் கிடைக்கவேண்டும் என்றால் இந்தியர்கள் நான்கு கருத்துகளை ஏற்கவேண்டும் என்றார் அவர்:
1. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முழுமையான ஒற்றுமை
2.  தீண்டாமையை முற்றிலுமாக ஒழிப்பது
3.  அகிம்சையை முற்றிலுமாக ஏற்பது
4.  கதரை அடிப்படையாகக்கொண்டு கிராமப் புனரமைப்பைச் செய்வது
ஆனால் காந்தியின் மிக நெருங்கிய சீடர்கள்கூட இவை அனைத்தையும் ஏற்கவில்லை. அவர்களுக்கு ஏதேனும் ஒன்றிலாவது மாற்றுக் கருத்து இருந்தது. காந்தியோ தம் கருத்துகளை மாற்றிக்கொள்வதாக இல்லை. தொண்டர்களைச் சேர்க்கவேண்டும் என்பதற்காக அவர் தன் கருத்துகளில் சமரசம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அதே நேரம் தன் கருத்துகளை கடைமட்டத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் அவர் அறிந்தே இருந்தார்.
இறுதியில், மேலே சொன்ன நான்கில் அகிம்சை வழியிலான போராட்டம் என்பதைத் தவிர வேறு எதையுமே காங்கிரஸ் அமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் மனத்திலும் மாற்றம் வரவில்லை. சுதந்தரம் அடைந்து 64 ஆண்டுகள் கழித்து இன்றும்கூட, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஆகியவற்றில் மக்கள் மனத்தில் மாற்றம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது காந்தியின் தோல்வி அல்ல. சுதந்தரம் என்ற ஒற்றைத் தேவையை முன்வைத்து காந்தி போராடியிருந்தால் 1947 ஆகஸ்ட் 15 அன்றுடன் காந்தியின் தேவை முடிந்து போயிருக்கும். அதேபோல வேறு யாரேனும் ஒரு தலைவர் முற்றிலும் வேறுபட்ட வேறு சில கருத்துகளை முன்வைத்து அதன்மூலம் இந்தியாவை முன்னேற்றி, அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்துவைத்திருப்பார் என்றாலும் நாம் காந்தியை மறந்துபோய்விடலாம்.
காந்தியின் தேவை இன்றும் இருப்பதற்குக் காரணம், இந்தியா முன்னேற அவர் முன்வைத்த அடிப்படைகளைவிடச் சிறந்தவையாக வேறு ஏதும் இல்லாமல் இருப்பதே. காந்தியின் எந்தவொரு தனிக் கருத்தோடும் நாம் மாறுபடலாம். ஆனால் அவற்றுக்கு வலுவான மாற்றை நாம் முன்வைக்கவேண்டும்.
உதாரணமாக, காந்தியின் பொருளாதார மாதிரி எனக்கு உவப்பானதாக இல்லை. ஆனாலும் அதற்கு எதிரான, மாறுபட்ட, முழுமையான ஒரு மாதிரி எனக்குத் தோன்றவில்லை. எனவே காந்தியின் பொருளாதாரக் கருத்துகளோடு நான் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
இந்த இடத்தில்தான் புனிதர் காந்தியைவிட, தெய்வம் காந்தியைவிட, மனிதர் காந்தி எனக்கு முக்கியமாகப் படுகிறார். அவரைக் கடவுள் என்று சொல்லி அவருடைய கருத்துகளை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. அவரை சாத்தான் என்று சொல்லி அவருடைய கருத்துகளை நான் முற்றிலுமாக விலக்கிவிடுவதில்லை. அவரை ஒரு மனிதராக மட்டுமே பார்த்து அவருடைய கொள்கைகளில் ஏதேனும் ஓட்டைகள் இருக்கின்றனவா என்று தினம் தினம் பரிசோதிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவரும் பிறரைப் போல தவறுகள் செய்யக்கூடியவர் என்பதால் அந்தத் தவறுகளை நம் வாழ்வில் தவிர்க்கமுடியுமா என்றும் என்னால் யோசிக்க முடிகிறது. அவரை எங்கோ ஓர் உச்சியில் கொண்டுபோய் வைக்காமல், அவரால் முடிந்துள்ளது என்றால் நம்மாலும் முடியும் என்று குறைந்தபட்சம் அதை முயற்சி செய்து பார்க்கவாவது முடிகிறது.
அந்த மனிதர் காந்திதான் எனக்கு வேண்டும். நமக்கு வேண்டும்.
- பத்ரி சேஷாத்ரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக