தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, February 23, 2012

நான் இந்துவா? .....யார் நான்?

''நீ யார்?''
திடீரென நண்பன் ஒருவன்  என்னைக் கேட்டான் .எதற்காக இப்படி ஒரு கேள்வி எனப் புரியாமல் புருவம் உயர்த்திப் பார்த்தேன் !
''என்ன முழிக்கிறே,எந்த மதத்தை சேர்ந்தவன்னு ,ஸ்கூல் சர்டிபிகேட்டில் எழுதி இருக்கிறே ,அதைதான் கேட்டேன்''என்று சிரித்தான்.
''நீ இந்துன்னுதானே எழுதி இருப்பே,அதைதான் நானும் எழுதி இருப்பேன்.காலம் காலமா அப்படிதானே எழுதிட்டு வர்றாங்க ,இப்ப என்ன புதுசா ஆராய்ச்சி?''என்று பதில் சொன்னேன்.
விடவில்லை அவன்!''நாம்ப இந்து என்பதை எந்த ஆதாரத்தை வச்சு சொல்றோம்  எனக்கு தெரியல உனக்கு தெரியுதான்னுதான் கேட்டேன்''என்றான்.
நாம் இந்து என்பதை எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறோம் என்பது பாட்டன் பூட்டன்களுக்கே தெரிந்திருக்க நியாயம் இல்லை.இந்து கடவுள்களின் பெயர்களை நாள்,நட்சத்திரம் பார்த்து வைக்கிறார்கள்.அதனால் நாம் இந்து!
நண்பனின் கேள்வி என்னைக் குடையவே சிலவற்றை எடுத்துப் பார்த்தேன்.
ஓரளவுக்கு விவரம் கிடைத்தது.
எழுத்தாளர் ராஜேந்திர சோழன் கை கொடுத்தார்.
அவர் எழுதியிருந்ததை தருகிறேன்.

''இந்தியத் துணைக் கண்டத்தில் இந்துக்கள் என்று ஒரு சமூகத்தினர் எப்போதும்  வாழ்ந்திருக்கவில்லை.இங்கு வாழ்ந்திருந்தோறேல்லாம் சமண,பவுத்த,சமயம் சார்ந்தோர்,சைவர்,வைணவர்,சாக்தர்,முருக பக்தர்,அம்மனை வழிபடுவோர் என பல தரப்பட்டோராகவே இருந்தனர்.இசுலாமிய படை எடுப்புக்குப் பின் முஸ்லீம்களும் ,ஐரோப்பிய படையெடுப்புக்குப் பின் கிறித்துவர்களும் இங்கு காலூன்ற இவ்விரு தரப்பினரையும் தவிர்த்த பிற அனைவரும் இந்துக்கள் என அழைக்கப் பட்டனர்.

சுதந்திர இந்திய அரசமைப்பு சட்டத்திலும்,மத உரிமை பற்றி கூறும் பிரிவு 25 ல்  இந்துக்கள் என்பதின் விளக்கமாக 'இந்துக்கள் என்னும் சுட்டுக் குறிப்பு சீக்கிய,சமணர்,அல்லது புத்த சமயத்தை வெளிப்பட மேற்கொண்டுள்ளவர்கள் என்னும் ஒரு கட்டுக் குறிப்பை உள்ளடுக்குவதாக  பொருள் கொள்ளப் படுத்தல் வேண்டும் ' என்கிறது.''என எழுதி இருக்கிறார்.
எனக்கு மண்டை காய்கிறது.விவரம் அறிந்தோர் எனக்கு உதவுவார்களா?
அரபு நாடுகளில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் சிந்து நதிக் கரையில் வாழ்ந்தவர்களை அந்த நதியின் பெயர் சொல்லி அழைத்ததால் நாளடைவில் இந்து என்பதாக மருவி விட்டது என்கிறார் இன்னொருவர்.

யார் சொல்வதை நம்ப?

No comments:

Post a Comment